×

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி கூட கிடைக்கவில்லை: கட்சியினர் கடும் அதிருப்தி

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி கூட கிடைக்காதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, அக்கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கப் போவதாக திடீரென அறிவித்தது. பாமகவின் இந்த அறிவிப்பு அதிமுக தலைவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போது, பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசினர். இந்நிலையில், வட மாவட்டங்களில் பாமக தான் செல்வாக்காக உள்ளது என்றும், எனவே தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற வாய்ப்பு இருப்பதாக பாமக கருதியது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்தித்தது. வட மாவட்டங்களில் கணிசமான வெற்றி வாய்ப்பை பாமக பெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் கூறி வந்தார். ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த வெற்றியை கூட பெற முடியவில்லை. மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தை கூட பாமகவால் பிடிக்க முடியாமல் போனது. பாமக சார்பில் போட்டியிட்டவர்களில் 43 பேர் ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டால் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம் என்ற பாமகவின் கனவு தவிடு பொடியானதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், நாம் தமிழர், மநீம கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இது இந்த கட்சிகளுக்கு அரசியலில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமகவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bamako ,AIADMK , AIADMK, pmk
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...