ஆவடி: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பூந்தமல்லி சுகாதார மாவட்டம் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. முகாமை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், எலும்பு மூட்டு சிகிச்சை, கண், பல் பரிசோதனை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு மகளிர் நலம், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்தழுத்த பரிசோதனை ஈசிஜி உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்த 45 மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னிஷியன், பணியாளர்கள் உட்பட 220 பேர், பொதுமக்களுக்கு சிகிச்சைகளை அளித்தனர். இதில் 550க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். முகாமில் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் 10 பள்ளி மாணவிகளுக்கு இலவச கண்கண்ணாடிகளையும் ஒரு மாற்று திறனாளிக்கு ரூ.7600 மதிப்பிலான காதொலி கருவியும் வழங்கப்பட்டது.
முகாமில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி, பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரசி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எம்.பாபு, பூந்தமல்லி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா, ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார், சுகாதார அலுவலர் ஜாபர், நகர் நல அலுவலர் முகம்மது ஹசின் கலந்து கொண்டனர்.