மதுரையில் அதிகாலையில் பரிதாபம்.! ஏசியில் மின்கசிவால் தீப்பற்றி உடல் கருகி தம்பதி பலி

மதுரை: மதுரையில் அதிகாலையில் படுக்கை அறைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி தீயில் கருகி பலியாகினர். மதுரை, ஆனையூர், எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன்(45). ஆர்கானிக் சோப் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு கம்பெனியை நடத்தி வந்தார். இவரது 2வது மனைவி சுபா (37). முதல் மனைவி சித்ராவை 2004ல் விவகாரத்து செய்து விட்டு, 2013ல் சுபாவை திருமணம் செய்துள்ளார். சுபாவின் முதல் கணவரான முத்துக்குமாருக்கு பிறந்த குழந்தைள் காவியா(17), கார்த்திகேயன்(14) ஆகியோருடன் சக்தி கண்ணன் ஒன்றாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 4 பேரும் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மழை பெய்ததால் குளிர் அதிகரித்தது. இதனால் அறையிலிருந்து எழுந்த காவியா, கார்த்திகேயன் இருவரும் வீட்டின் கீழ் அறைக்கு சென்று தூங்கியதாக தெரிகிறது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வெளியேறி உள்ளது. கண் விழித்த தம்பதி பாத்ரூமில் இருந்த தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி அணைக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஏசி திடீரென வெடித்துச் சிதறி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறையில் இருந்த மின் வயர்களிலும் தீப்பற்றி பரவியது. அறை முழுக்க கரும்புகை பரவியதால், வெளியேற முடியாமல் இருவரும் மூச்சு திணறி கருகிய நிலையில் உயிரிழந்தனர். அதிகாலையில் முதல் மாடியிலிருந்து வெளியேறிய கரும்புகையைக் கண்டு அக்கம்பக்கத்தினர்  திரண்டனர். சப்தம் கேட்டு மகள் காவியா, மகன் கார்த்திகேயன் இருவரும் எழுந்தனர். தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து தம்பதியின் கருகிய உடல்களை மீட்டனர். இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>