×

கோயில் திருப்பணிக்கு உபயதாரர்களிடம் நிதி பெற கட்டுப்பாடு: அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை

சென்னை: கோயில் திருப்பணிக்கு பொதுமக்கள் நன்கொடை, உபயதாரர்களிடம் இருந்து நிதி பெற கட்டுப்பாடு விதித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துவதற்கும், தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புனரமைப்பதற்கும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், பிற கட்டுமான பணிகளுக்கும் மதிப்பீடு தயாரித்து அங்கீகாரம் பெற ஆணையர் அலுவலகத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

இதற்கான முன்மொழிவுகளில் பிரதானமாக ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் நிதியிலோ அல்லது கோயில் நிதியிலோ திருப்பணி செய்ய அனுமதி கோரப்படுகிறது. கோயில் திருப்பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இனி வருங்காலங்களில் மொத்த மதிப்பீட்டில் பொதுமக்கள் நன்கொடை 100 சதவீதத்தில் 25 சதவீதம்,  உபயதாரர்கள் 25 சதவீதம், கோயில் நிதி அதிகபட்சம் 50 சதவீதம், ஆணையர் அலுவலகத்தில் நிதி அதிகபட்சம் 25 சதவீதம் வரை பெற நிர்வாக அனுமதி கோரப்பட வேண்டும். கோயில் திருப்பணிகள் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு உரிய அலுவலர்களது அனுமதி பெற்று திருப்பணி உண்டியல் நிறுவுவதற்கும், திருப்பணி நன்கொடை சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

உபயதாரர் நிதி என குறிப்பிடப்படும் நிகழ்வுகளில் உபயதாரர் அவர்களின் சொந்த செலவிலேயே உபய பணிகள் செய்ய இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதி ஆதாரம் குறித்த ஆவணம் ஏதேனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில் கட்டுமான சிறப்பினை கருத்தில் கொண்டு அவற்றை மீட்டெடுக்க வேண்டிய அரிதான இனங்களில் மட்டும் புனரமைப்பிற்கு ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் நிதியை கூடுதலாக வழங்கப்படும்.  திருப்பணிக்காக அறிக்கை அனுப்பும் போது, கோயில் செயல் அலுவலர் அறிக்கை, தக்கார் தீர்மானம், நிர்வாக அனுமதி மற்றும் மதிப்பீடு அனுமதி பூர்த்தி செய்யப்பட்ட படிவம், கோயில் முதலீடு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Commissioner of Charities , Restriction on obtaining funds from beneficiaries for temple restoration: Action by the Commissioner of the Treasury
× RELATED சென்னையில் அறநிலையத்துறை ஆணையர்...