சொத்து குவிப்பு வழக்கில் வருவாய் பணி அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வருவாய் பணி அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் ஆர்.சேகர். கடந்த 1992 பேட்ச் (ஐஆர்எஸ்) வருவாய் பணி அதிகாரியான இவர், குடியமர்த்தல் பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்தார். சென்னையை சேர்ந்த கிளாசிக் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் அன்வர் உசேன் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்தார். இவர், வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆட்களுக்கு விரைவாக இமிகிரேஷன் அனுமதி தருவதற்கு சேகர், ஆளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

இதேபோல் தினமும் 350லிருந்து 400 பேருக்கு இமிகிரேஷன் கிளியர் செய்துள்ளார். இந்த வகையில், 2007 ஜனவரி 1 முதல் 2009 ஜூலை 20 வரை சேகர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 8 லட்சத்து 42,316 சொத்து சேர்த்துள்ளார். இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேகர், அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அன்வர் உசேன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 2009ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  விசாரணையில் லஞ்சம் வாங்குவதற்காகவே அன்வர் உசேனை டிராவல் ஏஜென்டாக சேகர் நியமித்தது தெரியவந்தது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருவேங்கட சீனிவாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. சேகர், அவரது மனைவி மற்றும் டிராவல் ஏஜென்ட் அன்வர் உசேன் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சேகர் வருமானத்திற்கு அதிகமாக 471.05% சொத்து சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், சேகர் மற்றும் அன்வர் உசேன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் இருவருக்கும் சேர்த்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. சேகரின் மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

Related Stories:

More
>