×

அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்த 168 சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை: பதிவுத்துறை உயர் அதிகாரிகள் தகவல்

சென்னை:தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே 4ம் தேதி அறிவித்தது. ஆனால், வரன்முறை கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி 14 லட்சம் மனைகளில் 4 லட்சம் மனைகள் மட்டுமே வரன்முறை செய்யப்பட்டன. அதே நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.. இந்த ஆய்வில் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்து இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி ஆம்பூர், காட்பாடி, திருப்பத்தூர், திண்டிவனம் 2ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், திருமங்கலம் அலுவலகம், குன்னூர் சார்பதிவாளர் அலுவலகம், ராஜபாளையம் அலுவலகம், நத்தம் சார்பதிவாளர் அலுவலகம், திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகம், சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகம்,  ராஜசிங்கமங்களம் அலுவலகம், வடமதுரை அலுவலகம், ஒட்டன்சத்திரம் அலுவலகம், மேலூர் அலுவலகம், கருங்கல்குடி அலுவலகம் உட்பட 168 அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, வேலூர், சேலம், கோவை, ஊட்டி, நாகை உள்ளிட்ட பதிவு மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்த அலுவலகங்களில் விவரங்களை தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் மறைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக ஐஜி சிவன் அருள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்த 168 சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பதிவுத்துறை முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த ஆட்சி காலத்தில் பதிவுப்பணிகள் நடந்துள்ள தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, போலியாக பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களை கண்டறிந்து அறிகை்க அளிப்பதற்காக ஒரு சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

அதன்பேரில் விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. மேலும், அந்த குழு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்கின்றனர். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பதிவுத்தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படுகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Housing, Dependents, Activity, Registry
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...