×
Saravana Stores

பிஎன்பி பாரிபா ஓபனில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிளிஸ்டர்ஸ்: முதல்முறையாக எம்மா

இண்டியன் வெல்ஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ் (38 வயது), 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரில் மீண்டும் களமிறங்குகிறார். பெல்ஜியத்தை சேர்ந்த கிளிஸ்டர்ஸ் யுஎஸ் ஓபனில் 3 முறை (2005, 2009, 2010), ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறை (2011) என 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர் ஆவார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பல முறை காயம் காரணமாக அவதிப்பட்ட இவர், தனது 23வது வயதிலேயே திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2007ல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் களத்துக்கு திரும்பி 3 ஆண்டுகளில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றதுடன், தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை பெற்ற முதல் ‘தாய்’ என்ற பெருமையையும் வசப்படுத்தினார். 2012 யுஎஸ் ஓபனுக்கு பிறகு 2வது முறையாக ஓய்வு முடிவை அறிவித்த கிம், 2020 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் விளையாட வந்தார். தொடர்ந்து சில போட்டிகளில் களமிறங்கியும் பெரிதாக சாதிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இண்டியன் வெல்சில் இன்று தொடங்கும் பிஎன்பி பாரிபா ஓபன் தொடரில் கிளிஸ்டர்ஸ் களமிறங்குகிறார். இண்டியன் வெல்ஸ் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர் (2003, 2005), 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இங்கு மீண்டும் விளையாட உள்ளார். ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி பெற்றுள்ள கிம் தனது முதல் சுற்றில் செக் குடியரசின் கேதரினா சினியகோவாவை எதிர்கொள்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில், யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு, கரோலினா பிளிஸ்கோவா, கோன்டாவெய்ட், ஆன்ஸ் ஜெர், மரியா சாக்கரி, சிமோனா ஹாலெப், கார்பினி முகுருசா உள்பட முன்னணி வீராங்கனைகள் களமிறங்குவதால் சாம்பியன் பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது.

Tags : BNP Bariba Open ,Emma , BNP Bariba, Glisters, Emma
× RELATED வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!