டிஜிபி உத்தரவை பூசி மெழுகும் அதிகாரிகள்: குமரியில் வார விடுமுறைக்காக ஏங்கும் போலீசார்

மார்த்தாண்டம்: தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள், திருமணநாள் ஆகியவற்றுக்கு விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்று, சமீபத்தில் காவல் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அனைத்து காவல் நிலையங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. பணி நிமித்தம் மன நெருடல், பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளான போலீசாருக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரும் நிவாரணியாக இருந்தது.  

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை காவல் இயக்குனரின் உத்தரவை சில அதிகாரிகள் அமல் படுத்த முன் வரவில்லை என்ற புகார் எழுந்து இருக்கிறது. உத்தரவை மீறினால் நடவடிக்கை பாயும் என்பதால் புதிய உத்திகளை பல காவல் அதிகாரிகள் கை கொண்டு வருகிறார்களாம்.

அதாவது வார விடுமுறை அளிக்காமல் பணி வாங்கும் அதிகாரிகள் ஆவணத்தில் மட்டும் விடுமுறை அளித்ததாக பதிவிட்டு ஏமாற்றி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈயம் பூசியது போல் இருக்க வேண்டும். ஆனால் பூசி மொழுக கூடாது என்ற பழமொழிக்கு ஏற்ப புதிய உத்திகளை கையாண்டு சில உயர் அதிகாரிகளின் பழிவாங்கும், ஏமாற்று படலத்தை அரங்கேறி வருவது காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள 2 முக்கிய காவல் உட்கோட்டங்களில் இந்த சம்பவங்கள் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்து இருக்கிறது.

தினசரி காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை எஸ்பி பெற்று, ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும் என்பதுதான் போலீசாரின் புலம்பலாக உள்ளது. இது தவிர போலீசாரிடம் உட்கோட்ட வாரியாக அல்லது காவல் நிலையம் வாரியாக எஸ்பி குறைதீர் கூட்டங்களை போலீசாருக்கு மட்டும் (அதிகாரிகள் தவிர்த்து நடத்தினால்) மட்டுமே தீர்வு காண இயலும் என்பதே, தற்போது வார விடுமுறையை பெற்றதாக ஏமாற்றப்படும் போலீசாரின் கண்ணீர் குரலாக உள்ளது.

இது விஷயத்தில் குமரி போலீஸ் எஸ்பி பத்தி நாராயணன் சாட்டையை சுழற்றுவாரா? காவல்துறை இயக்குனரின் உத்தரவுப்படி வார விடுமுறையை கண்டிப்பாக அமல்படுத்த முன் வருவாரா? வார விடுமுறை கிடைக்காத போலீசார் பாதிக்காத வண்ணம் அவர்களிடம் இருந்து புகார் பெற்று நடவடிக்கை எடுப்பாரா? என்பதுதான் தற்போது பாதிக்கப்பட்டுள்ள காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

More
>