×

தமிழகத்தில் 2020-21ம் நிதியாண்டில் வாகனங்களின் எண்ணிக்கை 3.9 கோடியை தாண்டியது: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் வாகனப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு 2020-21ம் நிதியாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3.9 கோடி வாகனங்கள் மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதில் தமிழகத்தில் 3.09 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. மேலும் நாள்தோறும் புதிதாக வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 2017ம் ஆண்டு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 19,12,526 ஆக இருந்தது.

இதுவே நடப்பு ஆண்டில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கூட 11,49,465 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.  இதனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஆங்காங்குள்ள சிக்னல்களில் பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் வேகமான பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இது பொதுமக்களுக்கு மட்டும் அல்லாமல் உணவுப்பொருட்கள், காய்கறிகள், கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் போன்ற பல்வேறு வகையிலான சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் நீண்ட நேரம் ஆகிறது. இதனால் அதனை சார்ந்த பணிகளும் உடனே நிறைவடையாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளின் விவரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதாவது, தகவல் சேகரிக்கும் போது ஒருசில இடங்களில் சாலைகளின் அகலத்தை அதிகரித்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது தெரியவரும். வேறு சில இடங்களில் பாலம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்பது தெரியவரும். பிறகு அந்த இடங்களில் சம்பந்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்’ என்றனர்.

இதுகுறித்து சுதந்திர வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட்மேத்யூ கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இதுநாள் வரையில் போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக தெரியவில்லை. தற்போது இயல்புநிலை மீண்டும் திரும்பி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தில்  பிற நகரங்களைப்போல் அரசு பேருந்துகள் பயணிப்பதற்கு என்று பிரத்தியேக வழித்தடம் அமைக்க வேண்டும். அப்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் குறையும். ஆங்காங்கு நடந்து வரும் கட்டுமான பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது.


நிதியாண்டு    வாகனங்களின் எண்ணிக்கை
2015-16        2,20,33,780
2016-17        2,38,45,064
2017-18        2,56,61,556
2018-19        2,76,88,185
2019-20        2,95,09,863
2020-21        3,09,44,816



Tags : Tamil Nadu ,Transport Department , Tamil Nadu, Fiscal Year, Vehicle, Number, Department of Transport
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும்...