×

முதல் பகல்/இரவு டெஸ்ட் முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு: மந்தனா அபாரம்

குயின்ஸ்லாந்து: இந்திய மகளிர் அணி முதல் முறையாக நேற்று  இளஞ்சிவப்பு பந்தின் மூலம் விளையாடும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில்  களமிறங்கியது. குயின்ஸ்லாந்தில்  தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில்  மேக்னா சிங், யஷ்டிகா பாட்டீயா ஆகியோர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் அறிமுகமாயினர். ஆஸி அணியில் அனபெல் சதர்லேண்டு, டாரிஸ் பிரவுன், ஸ்டெல்லா  கேம்பெல்,  ஜார்ஜியா வாரேஹம் என 4பேர் அறிமுகமாயினர். இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிரிதி மந்தானா, ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

மந்தனா வேகம் காட்ட, ஷபாலி நிதானமாக ஆடினார். மந்தனா 51 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.  இருவரையும் பிரிக்க ஆஸியின் 7 வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் 25ஓவர் வரை பலன் தரவில்லை. ஷபாலி அடித்த பந்தை 3 முறை முறை கேட்ச் பிடிக்காமல் ஆஸி தவற விட்டது. ஆனால் ஷோபி வீசிய 26வது ஓவரில் ஷபாலி அடித்த  முதல் பந்தை சரியாக கேட்ச்பிடித்தார் டேலியா. அப்போது இந்தியா 25.1ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 93ரன் எடுத்திருந்தது. ஷபாலி  31 ரன் எடுத்தார். அடுத்து ஆட வந்த பூனம் ராவத், மந்தனா இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினார். பூனம் தனது 16வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டம் மழையால் தடைப்பட்டது. அப்போது இந்தியா 39.3ஓவரில் 114ரன் எடுத்திருந்தது. சுமார்  ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து 4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் முதல் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியா  44.1ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 132ரன் எடுத்திருந்தது. மந்தானா 80*, பூனம் 16* ரன்னுடன் 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடர உள்ளனர்.

Tags : Mandana Aparam , Test, first day match, rain, Mandana
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்