×

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தம்: தமிழக கடலோர பகுதியில் மழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில்  வடமேற்கு பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி, அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயல் ஒடிசாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் கடலோப் பகுதியில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. இதனால்,  வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. அதே நேரத்தில் தென் மேற்கு பருவக் காற்று காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சின்னக் கல்லார் பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை, சோலையாறு பகுதியில் 80 மிமீ மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்பு  பகுதியில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், தென் மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் தென் மாவட்டங்களில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை பெய்யும். தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



Tags : Bay of Bengal ,Tamil Nadu , Barometric pressure again in the Bay of Bengal: Rains in the coastal areas of Tamil Nadu
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...