ரோஹினி கோர்ட் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து டெல்லியில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை: மற்றொரு ரவுடி கும்பல் அட்டூழியம்

புதுடெல்லி: டெல்லி ரோஹினி கோர்ட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று டெல்லியில் பிரபல ரவுடி ஒருவன் மற்றொரு ரவுடி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரோஹினி கோர்ட்டில் புகுந்த ரவுடி கும்பல், மற்றொரு ரவுடியை திறந்தவெளி நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அதேநேரம், வழக்கறிஞர்கள் உடையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இரு குற்றவாளிகளையும் சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லியின் நஜாஃப்கார் பகுதியில் நேற்றிரவு ரவுடி நந்து என்பவனின் கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காரில் இருந்த திவான்ஷ் (28) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாவ்லா காவல் நிலைய போலீசார், சுட்டுக் கொல்லப்பட்ட திவான்ஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட திவான்ஷின் மீது டெல்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரவுடி கும்பலை சேர்ந்த திவான்ஷ், மற்றொரு ரவுடி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ் குமார் மீனா கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட திவான்ஷ், தனது குடும்பத்தினருடன் முந்தேலா குர்த் கிராமத்தில் வசித்து வந்தார். வெள்ளை நிற காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், திவான்ஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் எட்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. சம்பவ இடத்திலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள், ரவுடி நந்து கும்பலை சேர்ந்தவர்கள்.

அவர்கள், வெள்ளை நிற காரில், திவான்ஷை துரத்தி வந்து கொன்றுள்ளனர். கைரா பெண்ட் பகுதியில் திவான்ஷின் காரை முந்தி சென்று மடக்கினர். பின்னர், திவான்ஷ் காரில் இருந்து தப்பிச் செல்லாத வகையில் சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகிறோம். மூன்று பேர் கும்பல் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவர் காரில் அமர்ந்திருக்க, மற்ற இருவரும் திவான்ஷை கொன்றுள்ளனர்’ என்றார்.

Related Stories:

More