×

வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு ;ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும்: கோவையில் சரத்குமார் பேட்டி

கோவை: ‘‘தமிழக அரசு வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. எனவே, இதை ஒன்றிய அரசு ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்,’’ என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். கோவையில் சமக தலைவர் சரத்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரை சிறப்பாகவும், சீராகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். முழு செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை சொல்ல இன்னும் 2, 3 மாதம் ஆகும்.

ஆனால், தற்போதைய ஆட்சி, சட்டமன்றத்தை சிறப்பாக ஒரு ஜனநாயக முறையில் நடத்தி முடித்துள்ளது ஒரு சான்று. உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை நேரடியாக மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் நோக்கம். எனவே, சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து போட்டியிடலாம் என தெரிவித்து உள்ளேன். அதை ஏற்று பல்வேறு இடங்களில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எந்தெந்த பகுதிகளில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்ணும் கருத்துமாக சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தற்போதைய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்றால் வருந்த வேண்டாம். தங்களது கணக்குகளை காட்டிக் கொள்ளலாம்.

கொடநாடு விசாரணையில் முதலில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு சென்று தன்னை நிரூபிக்கலாம் அதை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதியாக இருந்தால் விடுவிக்க வேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. வேளாண் சட்டத்தை பொருத்த அளவில் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. எனவே, இதை ஒன்றிய அரசு ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Tags : Union government ,Sarathkumar ,Coimbatore , Opposition to agricultural law; Union government should consult: Sarathkumar interview in Coimbatore
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...