×

எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை: உண்மையை சொன்ன ராதிகா

விருதுநகர் பாஜ வேட்பாளர் ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது ராதிகா பேசுகையில், ‘‘கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றியத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய உங்கள் தொகுதி எம்பி எதிர்க்கட்சியை சேர்ந்தவர். அதனால் எந்த திட்டத்தையும் அவருக்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்பிக்களை ஒன்றிய பாஜ அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், பாஜ வேட்பாளரே, ‘எதிர்க்கட்சி எம்பி என்பதால்தான் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை’ என பேசியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீர் அரசியல்வாதியான ராதிகா, அரசியலே தெரியாமல் பேசுகிறாரே என பாஜ தொண்டர்கள் தலையில் அடித்துக் கொண்டனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சரத்குமார், ‘‘தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும் ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது’’ என பேசி சமாளித்தார்.

* ‘யக்கா… மாமாவை பேசச் சொல்லுங்க…’
விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை ராதிகா, அய்யனார் நகரில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென ‘யக்கா.. மாமாவ பேசச் சொல்லுங்க..’ என குரல் கொடுத்தார். அதிர்ச்சியில் பேச்சை நிறுத்திய ராதிகா, ‘மாமாவா…?’ என பெண்ணிடம் கேட்க. அந்த பெண்ணோ.. ‘அக்காவுக்கு மாமான்னா.. எங்களுக்கும் மாமா தான..’ என்றார். வேறு வழியின்றி, ‘இருங்க பேச சொல்றேன்’ என்று கூறியவாறு நடிகர் சரத்குமாரை பேசுமாறு ராதிகா அழைத்தார்.

The post எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை: உண்மையை சொன்ன ராதிகா appeared first on Dinakaran.

Tags : union government ,Radhika ,Virudhunagar ,BJP ,Sarathkumar ,Chatur Mukkuranthal ,Bajja ,Dinakaran ,
× RELATED நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர்...