×

“பாதங்களுக்கு செருப்பே தவிர செருப்புக்கு பாதம் அல்ல” : அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்க : சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!!

சென்னை : அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என, மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (செப். 25) தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

ஜூலை 07, 2021 அன்று மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதி இருந்தேன். தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழித் தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் (Staff Selection Commission) நடத்தும்போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.

அஞ்சல் உதவியாளர்கள் முன்வரிசைப் பணியாளர்கள். அஞ்சல் பிரிப்பு உதவியாளர்கள் தபால்கள் உரிய முகவரிக்கு போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகப் பணிகளை மேற்பார்வை இடுபவர்கள். இவர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரியாவிட்டால் எப்படி பணிபுரிய முடியும்? சேவைகள்தான் சிரமத்துக்கு ஆளாகும்.

இப்பணி நியமனங்கள் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படுவது என்றாலும் எனது கோரிக்கை அஞ்சல் இயக்குநரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியா போஸ்ட் பதில் அளித்துள்ளது. பதிலுக்கு நன்றி.

பாதங்களின் அளவுக்கு செருப்பு இருக்க வேண்டுமேயொழிய, செருப்புக்குத் தகுந்தாற் போல பாதங்களைச் செதுக்க முடியாது. மொழி தெரியாதவர்களிடம் மக்கள் எப்படி உரையாடுவது? சேவை பெறுவது? மக்கள் நலனே முக்கியம். அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் தேர்வுகளைக் கடந்த காலங்களில் இருந்தது போல மாநில அளவில் நடத்துங்கள். மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்யுங்கள்.

இவ்வாரு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags : Venkatesh , சு.வெங்கடேசன்
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...