×

நாகர்கோவிலில் கடல் போல் காட்சி தரும் அனந்தனார் குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடக்குகோணத்தில் உள்ள அனந்தனார் குளத்தில் மீண்டும் படகு குழாம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. காலப்போக்கில் நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், ஆக்கிரமிப்பாளர்களால் குளங்கள் அழிக்கப்பட்டன. கடல் போல் காட்சி தர வேண்டிய குளங்கள் பல அழிக்கப்பட்டு தற்போது கட்டிடங்களாலும், குப்பைகளாலும் நிரம்பி கிடக்கின்றன. தற்போது சுமார் 3 ஆயிரம் குளங்கள் மட்டுமே மாவட்டத்தில் உள்ளன. இவற்றில், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அனந்தனார்குளமும் ஒன்றாகும்.

கடந்த 2018ம் ஆண்டு இந்த குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அனந்தன் குளத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி செய்வதற்கு ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் படகுக் குழாம் அமைக்கப்பட்டது.  விடுமுறை காலங்களில் உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிப்பது வழக்கம். நாகர்கோவிலில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் ஈர்க்கும் விதமாக இப்படகுக் குழாம் அமைய பெற்றது.

இப்படகுக் குழாமில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வசதியாக இரண்டு இருக்கைகள் கொண்ட மிதி படகில் 30 நிமிடங்கள் சவாரி செய்ய ரூ.100 ம், நான்கு இருக்கைகள் கொண்ட மிதி படகில் 30 நிமிடங்கள் சவாரி செய்ய ரூ.150 ம், மூன்று இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் 30 நிமிடங்கள் சவாரி செய்ய ரூ.150 ம், கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  இப்படகுக் குழாம் வாரத்தின் ஏழு நாட்களும்  காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் அறிவித்தனர். இந்த படகு குழாம் இயக்கத்தை விஜயகுமார் எம்.பி., அப்போதைய மாவட்ட  கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.

இதற்காக குற்றாலத்தில் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகுகளும் வரவழைக்கப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பார்க்கிங் மற்றும் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுற்றுலா வளர்ச்சி துறை தெரிவித்து இருந்தது.
ஆனால் 2018ம் ஆண்டு இறுதியில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டார். அதன் பின்னர் இந்த படகு குழாமும் செயல்பாடு இழந்தது. போதிய சுற்றுலா பயணிகள் வரவில்லை என்பதால், படகு குழாமை இயக்க முடிய வில்லை என கூறிய சுற்றுலா வளர்ச்சி கழகம் இங்கிருந்த படகுகள் அனைத்தையும் மீண்டும் குற்றாலத்துக்கே கொண்டு சென்றனர். இதனால் சுமார் ரூ.10 லட்சத்தில் தொடங்கப்பட்ட படகு குழாம் இப்போது வீணாகி கிடக்கிறது.

அனந்தனார் குளத்தில் தண்ணீர் நிரம்பி காட்சி தரும் நிலையில், படகுகள் இல்லாமல் வெறுமனே கிடக்கும் படகு தளத்தில் அமர்ந்து, இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத கும்பல்கள் வந்து செல்வதாக பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர். படகு குழாம் முறையாக செயல்பட்டு இருந்தால், அந்த பகுதியில் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆனால் முறையாக செயல்படுத்தாத காரணத்தால், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறி உள்ளனர். அதிமுக ஆட்சியில் இது போன்று பல திட்டங்கள் தொடங்கப்பட்டு முறையாக செயல்படுத்தாமல் விட்டதன் காரணமாக பல லட்ச ரூபாய் இழப்பு என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. கொரோனா காரணமாக வெளி இடங்களுக்கு செல்ல மக்கள் அச்சப்படும் நிலையில், சற்று மன ஆறுதல் அளிக்கும் வகையில் இது போன்ற இடங்களில் படகு குழாம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

2018ம் ஆண்டு இறுதியில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டார். அதன் பின்னர் இந்த படகு குழாமும் செயல்பாடு இழந்தது. போதிய சுற்றுலா பயணிகள் வரவில்லை என்பதால், படகு குழாமை இயக்க முடிய வில்லை என கூறிய சுற்றுலா வளர்ச்சி கழகம் இங்கிருந்த படகுகள் அனைத்தையும் மீண்டும் குற்றாலத்துக்கே கொண்டு சென்றனர்.

Tags : Ananthanar pool ,Nagercoil , Nagercoil, Ananthanar Lake, Boating, Public
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்