×

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு 4 மாணவிகள் முதலிடம்: செப்.15ல் வகுப்புகள் தொடங்கும்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பாடத்திற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், விழுப்புரம், திருநெல்வேலி, கடலூர், அரியலூரை சேர்ந்த 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளமறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வள பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் இளமறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7 முதல் ஜூன் 12 வரை பெறப்பட்டது.

அதன்படி, மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என 29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். பதிவாளர் தமிழ்வேந்தன், முதன்மையர்கள் வெங்கடேச பழனிசாமி, சுதாகர், வேளாண் பொறியியல் கல்லூரி இயற்பியல் மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை தலைவர் பாலாஜி கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், விழுப்புரத்தை சேர்ந்த மாணவி திவ்யா, கடலூரை சேர்ந்த ஷர்மிளா, திருநெல்வேலியை சேர்ந்த மெளரீன், அரியலூரை சேர்ந்த நவீனா ஆகிய 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில், ஷர்மிளா மட்டும் பி.எஸ்சி. வேளாண்மையில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். திவ்யா, மெளரீன், நவீனா ஆகியோர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும், நடப்பாண்டில் கட்ஆப் மதிப்பெண்கள் 190க்கு மேல் 1,123 பேரும், 185க்கு மேல் 2,415 பேரும், 180க்கு மேல் 2,415 பேரும், 170க்கு மேல் 4,112 பேரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், 200க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 1,053 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பை தமிழ் வழியில் படிக்க 100 இடங்கள் உள்ள நிலையில், அதற்கு 9,134 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 126 இடங்கள் உள்ள நிலையில், 84 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதனையடுத்து அவர்களுக்கு அட்மிஷன் நடத்தப்படும்.

தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் 22, 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. அப்போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம்போல் திறக்காமல் புதுமையான‌ முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வரவழைக்கப்பட்டு அவர்களை ஒன்றிணைத்து வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து அவர்களுக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என்றார்.

The post தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு 4 மாணவிகள் முதலிடம்: செப்.15ல் வகுப்புகள் தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWAI TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY ,Viluppuram ,Tirunelveli ,Cuddalore ,Ariyalur ,Govai Tamil Nadu Agricultural University ,Dr. ,J. Jayalalitha University of Fisheries ,
× RELATED கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!!