×

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு ‘காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி’: பிறந்தநாள் வாழ்த்துடன் செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார் என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவிற்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என ஏற்கனவே கூறி விட்டோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்தும் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டோம். சட்டத்துக்கு புறம்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் செயல்படுவர் என்பதால் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம்.

அப்புறம் எப்படி எங்களை பாஜவின் பி டீம் என கூற முடியும். பாமக விக்கிரவாண்டியில் போட்டியிடுவதில் தைரியம் எல்லாம் ஒன்றுமில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவிற்கு உள்ள வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறது. இங்கு பாமக வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என அவர்களுக்கே தெரியும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. எதிரி தோட்டத்தில் மல்லிகைப்பூ பூத்திருந்தால் அதற்கு வாசம் இல்லை என்று சொல்ல முடியுமா? காங்கிரசை கட்டி காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார்.

ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏற்கனவே ராகுல் காந்தியை புகழ்ந்து பேசி, அவரது வீடியோவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு செல்லூர் ராஜூ சர்ச்சையில் சிக்கினார். பின்னர் எக்ஸ் தளத்திலிருந்து தனது பதிவை நீக்கினார். மீண்டும் தற்போது ராகுலை புகழ்ந்திருப்பது கட்சியினரிடையே மீண்டும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

The post மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு ‘காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி’: பிறந்தநாள் வாழ்த்துடன் செல்லூர் ராஜூ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Congress' ,Sellur Raju ,Madurai ,Former minister ,Congress ,AIADMK ,minister ,Selur Raju ,
× RELATED மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி