17 ஐகோர்ட் நீதிபதிகள் ‘டிரான்ஸ்பர்’- சென்னைக்கு ஒருவர் வருகை; ஒருவர் இடமாற்றம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய 17 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கொல்கத்தாவுக்கும், குஜராத் நீதிபதி ஒருவர் சென்னைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் ஒன்பது நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 17 நீதிபதிகள் தற்போது இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மேற்கண்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இடமாற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 17 நீதிபதிகளின் பட்டியலில், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் ஆர்.உபாத்யாய், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த நீதிபதிகள் 8 பேர், தலைமை நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 நீதிபதிகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: