×

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் தயார்: இனி ஒவ்வொரு பிர்காக்களில் நீர் இருப்பு, தேவையை அறியலாம்

சென்னை: தமிழகத்தில் 34 ஆறுகள் உள்ளன. இதில், தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஒரு சில ஆறுகளை தவிர மற்ற ஆறுகள் பிற மாநிலங்களில் இருந்து உற்பத்தியாகி தமிழகத்துக்குள் பயணிக்கிறது. இதனால், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீர் தான் முக்கிய நீர்  ஆதாரமாக உள்ளது.  இந்த, 44 ஆயிரம் ஏரி, குளங்கள்,  120 அணைகளில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நீர் தான் தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு  50 சதவீதம் பயன்படுகிறது. இதில் மீதமுள்ள 50 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பெறப்படுகிறது. நிலத்தடி நீர் தான் பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.  

ஆனால், தமிழகத்தில்  குடிநீர் தவிர பிற தேவைகளுக்கு  அதிநுகர்வு பகுதியான 462 பிர்காக்களிலும், மற்றும் அபாயகரமான பகுதியான 79 பிர்காக்களிலும் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் பாதி அபாயரமான மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் தண்ணீர் எடுக்க எந்த வித தடையும் இல்லை. இருப்பினும் குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்த பிறகே,  மற்ற பயன்பாட்டிற்கு தண்ணீர் தருவது தான் கொள்கையாக உள்ளது. எனவே, தமிழகத்தில்  மாநிலத்தில் மேற்பரப்பு நீர்வளம், நில நீர்வள இருப்பை கணக்கில் கொண்டு நீர் இருப்பு உள்ளதா, நீர் தேவை இருக்கிறதா என்பது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் நீர் மேலாண்மை திட்டம் தயாரிக்க நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், மாநிலம் முழுவதும் 1166 பிர்காக்களுக்கு தனித்தனியாக நீர் மேலாண்மை திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நீர் மேலாண்மை திட்ட அறிக்கையில்  மாநிலம், மாவட்டம், பிர்கா விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.அந்த பிர்கா அபாயகரமான பகுதியா, பாதுகாப்பானதா என்ற விவரமும் அதில் இருக்கும். அந்த பிர்காக்களில் சராசரி மழை  அளவு விவரம், நீரின் தரம் தொடர்பாகவும், ஒவ்வொரு ஆண்டும் நீர் இருப்பு குறித்தும், நிலத்தடி நீர் வளம், மேற்பரப்பு நீர் வளம் குறித்தும் தனித்தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நீர் இருப்பில் விவசாயம், குடிநீர், தொழிற்சாலை தேவைகளுக்கு எவ்வளவு நீர் தரலாம் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிர்காவில் நீர் தேவை இருக்கிறதா, நீர் இருப்பு போதுமானதா என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து தான் இனி வருங்காலங்களில் குடிநீர், பாசன மற்றும் பிற தேவைகளுக்கு தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், அந்த பிர்காக்களில் நீர் இருப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க பயன் உள்ளதாக இருக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Birkas , Water management plan, water reserve,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...