கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு கூலித் தொழிலாளி கல்லால் அடித்து படுகொலை: 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: குடிபோதையில் ஏற்பட்ட மோதலில், கல்லால் அடித்து கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேரை, போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், சுண்ணாம்புகுளம் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில், 2 பேர் மது அருந்தினர். அந்த நேரத்தில் போதை தலைக்கேறியதும், அவர்களுக்கு வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் கை கலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த 2 பேர், ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கி, கல்லால் அடித்தனர்.

அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும், 2 பேரும் தப்பிவிட்டனர். இதைதொடர்ந்து, நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ஆறுமுகம் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், போலீசார்  சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், அதே பகுதியில் கிளிஞ்சல்களை சேகரித்து, விற்பனை செய்யும் குடோன் உள்ளது. அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்கின்றனர். அவர்கள், இரவு வேலை முடிந்ததும், மது அருந்த மேற்கண்ட டாஸ்மாக் கடைக்கு செல்வதும் வழக்கம் என தெரிந்தது. இதையடுத்து கிளிஞ்சல் குடோனில் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த தேசப்பன் (45), முத்து (30) ஆகியோர் ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், தலைமறைவாக இருந்த 2 பேரை, கைது செய்தனர்.

Related Stories:

>