×

நிரந்தர பாசனக்கால்வாயாக மாறுமா கம்பிக்குடி கால்வாய்?: நிலையூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நிலையூர் உபரிநீர் கால்வாயை நிரந்தர பாசனக் கால்வாயாக மாற்றி முறையாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள முள்ளிப்பள்ளத்தில் வைகை ஆற்றில் இருந்து கிளை கால்வாயாக பிரிகிறது. நிலையூர் கால்வாய். முள்ளிப்பள்ளம் முதல் நிலையூர் வரை சுமார் 23 கி.மீ நீளம் கொண்டது. இந்த கால்வாய் மேலக்கால், தாராபட்டி, கொடிமங்கலம், கீழமாத்தூர், நாகமலை புதுக்கோட்டை, வடிவேல்கரை, விளாச்சேரி வழியாக நிலையூர் பெரிய கண்மாயை சென்றடைகிறது. இந்த வழியில் உள்ள துவரிமான், மாடக்குளம், தென்கால் கண்மாய் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீராதரமாக உள்ளது.

நிலையூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் கம்பிக்குடி வரை மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் கடந்த 1962ம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களால் அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டு வந்தது. 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சுமார் 22.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 25 கி.மீ நீளமுள்ள நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது.நிலையூரில் இருந்து இந்த கம்பிக்குடி வரையிலான கால்வாய் மதுரை மாவட்டத்தில் பெருங்குடி, பரம்புபட்டி, வலையபட்டி வலையங்குளம், சின்ன உடைப்பு, சோளங்குருணி, எலியார்பத்தி, நல்லூர், குதிரைகுத்தி, விராதனூர், பெரியஆலங்குளம், ஓ.ஆலங்குளம், கொம்பாடி, தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாகவும், சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்குளம், நெடுங்குளம், முக்குடி, தவத்தாரேந்தல், விருதுநகர் மாவட்டத்தில் மாங்குளம், குரண்டி, ஆவியூர், அரசங்குளம் உள்ளிட்ட 54 கிராமங்களில் உள்ள 96 கண்மாய்கள் வழியாக கம்பிக்குடி சென்றடைகிறது.

இந்த நிலையூர் கால்வாய் தற்போது உபரிநீர் கால்வாயாக உள்ளது. இந்த கால்வாயை நிரந்தர பாசன கால்வாயாக மாற்றினால் இப்பகுதியில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுவதோடு. இப்பகுதி கண்மாய்களில் நீர் தேக்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் நீங்குமென இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்த கால்வாயை நிரந்தர பாசன கால்வாயாக மாற்ற வேண்டும் என்றனர்.

பாண்டியர் காலத்து கண்மாய், கால்வாய்
நிலையூர் கால்வாய் மற்றும் நிலையூர் கண்மாயை பாண்டிய மன்னர்கள் கிபி ஒன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்ட மன்னர்களும் சீரமைத்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன.

Tags : As a permanent irrigation canal Will the Kambikudi canal change ?: Nilayur farmers expect
× RELATED உயர்நீதிமன்ற நீதிபதி...