×

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் இன்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 29ம்தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவி, பூதேவி சமேதராக வரதராஜபெருமாள் எழுந்தருளி, வைரம், வைடூரியம் மாலைகள் அணிந்து ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதன்பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்டு காந்தி சாலையில் உள்ள தேரடிக்கு வந்தார். தேரின் மீது ஏறிச்சென்று வழிபட அதிகாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன்பிறகு தேர் நிலையில் இருந்து புறப்பட்டபோது பக்தர்கள், ‘’கோவிந்தா, கோவிந்தா, அத்திவரதா, அத்தி வரதா’’ என பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காந்தி சாலையில் இருந்து புறப்பட்ட தேர், காமராஜர் சாலை, நான்கு ராஜ வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து காந்தி ரோடு வழியாக தேர் நிலைக்கு வந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர், மோர், பழரசம், பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் வழங்கப்பட்டது. வரும் 29ம்தேதி த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் டிஐஜி பொன்னி, எஸ்பி சண்முகம் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Srivaradarajaperumal ,Kolagalam ,Kanchi ,Kanchipuram ,Varadarajaperumal ,Vaikasi Promotsava ceremony ,Kanchipuram Varadarajaperumal Temple ,Srivaradarajaperumal temple ,
× RELATED மயிலாடுதுறையில் பட்டண பிரவேச...