×

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ‘பெரியார் பேருந்து நிலையம்’- அதே பெயரில் புதுப்பொலிவு

மதுரை : மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.159.70 கோடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, ‘பெரியார் பேருந்து நிலையம்’ என்ற பெயரே பொருத்தப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரையின் 7.47 ஏக்கர் பரப்பளவிலான பழைய பெரியார் பேருந்து நிலையத்தில் பஸ்கள் போதியளவு நிறுத்த இடமும் இல்லாமல் இருந்தன.

பயணிகள், வாகனங்கள் நெரிசலை கருத்தில் கொண்டு அந்த பேருந்து நிலையத்தையும், அதன் அருகே இருந்த வணிகவளாக பேருந்து நிலையத்தை இணைத்து மறுசீரமைப்பு பணி என கூறி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.159.70 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி கடந்த 2018ல் துவங்கி நடந்து வருகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளத்திற்கு கீழ் முதல் தளத்தில் 241 கடைகளும், அதில் 371 கார்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ் இரண்டாவது தளத்தில் 4,865 சைக்கிள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் 57 பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அருகே 39 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் வர்த்தக நிறுவனமாக 44 கடைகளும், 2வது மற்றும் 3வது மேல் தளத்தில் தலா 46 கடைகளும், 4வது தளத்தில் மேற்கூரைப்பகுதியில் உணவகம் மற்றும் விளையாட்டு கூடம் அமைக்கப்படுகிறது.

 தற்போது இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவினர் மீனாட்சி பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். சிலை வைக்க வேண்டும் என கோரினர். இதுபோல் ஒருசில அமைப்பினர் அந்தந்த சமூக தலைவர் பெயரை சூட்ட கோரினர்.  இந்நிலையில் தமிழக அரசு,  பேருந்து நிலையத்தின் பழைய பெயரான ‘பெரியார் பேருந்து நிலையம்’ என பெயரிட்டு, அதற்குரிய பெயர் பலகையை பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனால், பெரியார் பேருந்து நிலையம் என வழக்கம் போல், பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை அழைக்கலாம்.

 இதுகுறித்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கூறுகையில், ‘‘மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவே மக்கள் மனதில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயர் பதிந்து விட்டது. மதுரைக்கான முக்கிய அடையாளம் மாறாமலும், பெரியாரின் புகழை ஒளிரச் செய்யும் வகையிலும் பழைய பெயரில் பெயர்ப்பலகை வைத்து பெருமை சேர்த்துள்ள மாநகராட்சி, தமிழக அரசின் செயல்பாட்டினை பாராட்டி வரவேற்கிறோம்’ என்றனர்.

Tags : Periyar Bus Stand ,Madurai , madurai, periya bus stand, smart city, madurai corporation
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை