×

கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம் தனியார் நிதி நிறுவனம் பல கோடி சுருட்டல்: திருத்தணியில் மக்கள் மறியல்

திருத்தணி: கவர்ச்சிக்கரமான திட்டங்கள் மூலம் ஏழை மக்களிடம் பலகோடி ரூபாய் சுருட்டிய நிதி நிறுவனம் முன் மக்கள் மறியல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-சித்தூர் சாலையில் ஒரு தனியார் நிதிநிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில், தங்க நகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் திருப்பி தரப்படும் என்றும் தினமும் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் கவர்ச்சிக்கரமான விளம்பரம் செய்துள்ளனர். இதன்படி 60 ஆயிரம் ரூபாய் கட்டினால் வாரத்திற்கு 5 ஆயிரம் வீதம் 52 வாரங்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். அத்துடன் திருத்தணி, ஆர்கே.பேட்டை அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திரா மாநிலம் நகரி, ஏகாம்பரகுப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் வளர்புரம், குருராஜபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜென்டுகளை நியமித்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் மாதந்தோறும் பணம் வசூலித்துள்ளனர்.

இதுபோல் பல்வேறு கவர்ச்சிக்கரமான திட்டங்களை தீட்டி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துவந்துள்ளனர். தங்க நகை திட்டத்தில் மாதம் 3 ஆயிரம் கட்டினால் வருடத்துக்கு பின்னர் 2 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதை நம்பிய ஏராளமான மக்கள், தங்களது பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து முதல் ஆறு திட்டங்களில் இணைத்துக்கொண்டு மாதந்தோறும் பணம் கட்டிவந்துள்ளனர். இவ்வாறாக பணம் வசூலிக்கப்பட்டவர்களுக்கு முதல் 3 வாரங்கள் மட்டும் அவரவர் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாத திகைத்த பொதுமக்கள், அந்த நிதி நிறுவன அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், தங்கள் பணத்தை திரும்ப தரவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியதால் திருத்தணி போலீசார் விரைந்துவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இதையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, கவர்ச்சிக்கரமான திட்டங்கள் மூலம் பலகோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாக தெரிகிறது. யார், யார் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags : Private finance company rolls multi-crore with attractive announcements: People stir in Thiruvananthapuram
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...