வேலூர் மாநகராட்சியில் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டம்: சோதனை முறையில் தொடங்க முடிவு

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி முழுவதும் தினசரி 200 டன் வரையில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம்பிரித்து  பெறப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவுமேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கின்றனர். அதிகளவிலான குப்பைகள் மாநகராட்சியில் சேகரிக்கப்படுவதால், திடக்கழிவு மேலாண்மை மையங்களில், குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது.

இந்நிலையில் காய்கறி கழிவுகள், இலைகள், உணவுக்கழிவுகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நெல்லை மாநகராட்சியில் வெற்றியடைந்ததை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் 2வது மண்டலத்தில் சோதனை முறையில் வீடுகளிலேயே உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து சுகாதார அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: ‘வேலூர் மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் மக்கும் குப்பைகளை உரமாக்க, தனியார் அமைப்புடன் இணைந்து மாநகராட்சி செயல்பட உள்ளது. இதற்காக, ைபப்மூலம் தயாரிக்கப்பட்ட கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனம் மூலம் குறைந்த விலைக்கு இந்த கருவிகள் வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு வீட்டிற்கு 2 கருவிகள் வாங்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இந்த பைப்புக்குள் காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், அழுகிய பழங்கள் உட்பட மக்கும் பொருட்களை கொட்டி வைக்க வேண்டும். எலும்பு போன்றவற்றை போடக்கூடாது. மக்கும் பொருட்களை இந்த பைப்புக்குள் கொட்டி வைத்தால் 45 நாட்களில் உரமாக மாறும்.

அதனை, வீட்டில் உள்ள செடிகளுக்கோ, மாடித்தோட்டம் வைத்திருந்தால் காய்கறி தோட்டத்துக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இனி வரும்காலங்களில் அவரவர் வீட்டில் உள்ள குப்பைகளை அவரவர்களே ைகயாளவும் அறிவுறுத்தப்படலாம். பொதுமக்கள் அதற்கு பழகிக்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் இத்திட்டம் 2 நாட்களில் சோதனைமுறையில் தொடங்கப்பட உள்ளது.

Related Stories:

More
>