×

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: நகரங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள்: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை:  வடகிழக்கு பருவமைக் காலத்தில் ஏற்படும் பேரிடரை சமாளிக்க, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.  வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தலைமை செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்பு துறை டிஜிபி கரன்சின்கா, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசியதாவது:  பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், வடிகால்கள் மற்றும் ஏரி குளங்களை தூர்வார நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தயாரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எச்சரிக்கை செய்திகளை இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
குடியிருப்போர் நலசங்களின்  பட்டியல் தயாரித்து வாட்ஸ் அப் குழு அமைக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளில் ஈடுபடுத்தும் பொருட்டு இளைஞர்களை கண்டறிந்து பயிற்சியளித்து, தேவையான மீட்பு உபகரணங்களை அவர்களுக்கு வழங்கி ஆயத்த நிலையை மேம்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் போதுமான இருப்பு வைக்க வேண்டும். அரசு சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதேபோல், நகர்புறங்களில் மழைநீர் வடிகால் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யவும், மிகவும் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளையும் உடனடியாக செயல்படுத்திட வேண்டும். குளங்கள் மற்றும் ஏரிகளின் கரைகளை வலுப்படுத்த வேண்டும்.  வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இயந்திர நீர் இறைப்பான்கள் மூலம் வெள்ள நீரை உடனுக்குடன் வெளியேற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுப்பணித் துறை உடனடியாக வல்லுநர் குழு அமைத்து நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணித்து தேவைப்படின் அணைகளிலிருந்து அவசரகாலத்திற்கு ஏற்ப வெள்ள நீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான பயிற்சி அளிக்கும் திட்டங்களை ஊக்குவிக்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கைபேசி செயலி மூலம் இணைந்து, பேரிடர் மீட்பு பணிகளை செயல்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தவும், கிராம பஞ்சாயத்து உதவியுடன் பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள மக்களை அருகிலுள்ள சமுதாய கூடங்களில் தங்க வைக்கவும், நிவாரண மையங்களில் தரமான உணவு, மருத்துவ வசதி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்திட வேண்டும்.   கொரோனா விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட் சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும் அனைத்து துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


37 ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு 37 மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆயத்த பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags : Northeast ,TN ,Chief Secretary , Northeast Monsoon, Chief Secretary, Instruction
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...