×

காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்

சென்னை: காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசளிக்கப்பட்ட   வீடியோ சமூக வலை தளத்தில் வைரலானது. சமையல் காஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து, தற்போது 900 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், மண் அடுப்பில் சமைத்தும், காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசளிக்கப்பட்ட சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.  ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அதுல்யாவுக்கு நேற்று முன்தினம் ராயபுரம் கல் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

விழாவில் கலந்துகொண்ட அதுல்யாவின் தோழிகள் அவருக்கு பரிசு ஒன்றை வழங்கி, அங்கேயே பிரிக்க வைத்தனர்.  அதில், சமையல் காஸ் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில், மண் அடுப்பு ஒன்றை பரிசாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் இதை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Gas Price, Video, Viral
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...