×

தமிழகத்தில் 12ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் கோவிட் தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்த வேண்டும்

* கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரை
*மாணவர்கள் நலன் குறித்தும் விவாதிப்பு

சென்னை: தமிழகத்தில், வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திறக்கப்பட்ட சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மாணவியின் தாய், தந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மாணவியின் தந்தை, அண்மையில் பெங்களூரு சென்று வந்துள்ளார். இதைத் தொடர்ந்து 103 பேருக்கு சோதனை ெசய்ததில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகப்படுத்தும் நோக்கில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Govt Vaccination Camp ,Tamil Nadu , Tamil Nadu, Govt Vaccination Camp, Chief Secretary
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...