×

கடந்த ஆட்சியாளர்களால் தங்கமும் மணியுமாக மின்ன வேண்டிய மின்துறை ஈயமும் பித்தளையுமாக மாறிவிட்டது: திமுக எம்எல்ஏ பரந்தாமன் விமர்சனம்; திமுக- அதிமுக இடையே காரசார விவாதம்

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று சட்டத்துறை, மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் (திமுக) பேசியதாவது:  சென்னை என்றாலே எழும்பூர் தான். எனவே எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது போல், தமிழக அரசும், சி.பி.ஐ. அமைப்பு விசாரணைக்கு வரும் போது மாநில அரசின் அனுமதியை பெற்றே விசாரணையை தொடங்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டுகிறேன்.

கோவாவில் உள்ளது போல், சட்ட அகடாமியை தமிழகத்தில் தொடங்க வேண்டும். மாவட்ட, சார்பு, கீழமை நீதிமன்றங்களில் வக்கீல்களுக்கு என்று தனியாக அறை வேண்டும். வக்கீல்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். வக்கீல்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கு விருந்தினர் இல்லம் கட்டிக் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் 7 சட்டக் கல்லூரிகள் மிகுந்த அவசர கதியில் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் உருவாக்காமல் தொடங்கப்பட்டுள்ளளன. மத்திய தணிக்கை அறிக்கையில், கடந்த ஆட்சியில் தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5க்கு வாங்கிய நிலையில், தமிழகம் மட்டும் ரூ.7 கொடுத்து வாங்கியது ஏன்?. தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கமும், மணியுமாக மின்ன வேண்டிய வாரியம், ஈயமும், பித்தளையுமாக மாறிவிட்டது. இது பேரீச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம்?. அந்த ஆட்சியாளர்களின் பேர் இச்சை தான் காரணம். இந்த அளவுக்கு கடன் ஏற்பட்டிருக்கிறது என்றால் கடந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு. வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை காணவில்லை.

மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அதற்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: எந்த அடிப்படையில் உறுப்பினர் இங்கே குற்றம்சாட்டி பேசுகிறார். அதற்கான ஆதாரத்தை காட்டி விட்டு பேச வேண்டும். கடந்த கால அரசை குற்றம் சொல்வதற்காக இவ்வாறு பேசுகிறார். நிலக்கரி குறித்து ஆய்வு செய்ய அப்போதே குழு அமைக்கப்பட்டதாக அத்துறையின் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஏற்கனவே கூறிவிட்டார்.

பரந்தாமன்: ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார். 2013-2018ம் ஆண்டு மத்திய தணிக்கை அறிக்கையில் 34வது பக்கத்தை எடுத்து பாருங்கள். ஒரு யூனிட் கூட தயாரிக்க முயற்சிக்காமல் திட்டமிட்டு வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பி.தங்கமணி (அதிமுக): கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே ஒரு யூனிட் மின்சாரம் ரூ.9, ரூ.13 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு வெளியான மத்திய தணிக்கை அறிக்கையில், மின் துறையில் தவறான நிர்வாகத்தால் ரூ.10,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி: மின் தேவை அதிகரிக்கும் போது, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வது வழக்கம் தான். ஆனால், கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 15 ஆண்டுகள், 25 ஆண்டுகளுக்கு நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். சந்தையில் விலை குறையும் என்று தெரிந்தே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனால் தான், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் குறைந்த காலத்திற்குத்தான் கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சி காலத்திலும் 15 ஆண்டுகளுக்கு என தனியாரிடம் இருந்து மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ.7.70, ரூ.8.30 விலையில் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

Tags : Barandaman ,DMK ,AIADMK , The power sector that should have been gleamed like gold and beads by past rulers has turned into lead and brass: DMK MLA Barandaman Criticism; Karachara debate between DMK and AIADMK
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...