×

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு: சட்டப்பேரவை செயலாளரிடம் சான்றிதழ் பெற்றார்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி மரணம் அடைந்தார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து மேல்சபை செல்லும் எம்பிக்களின் ஒரு இடம் காலியானது. இந்த காலி இடத்தை நிரப்புவதற்காக செப்டம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி  31ம் தேதி வரை நடைபெற்றது.

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா  போட்டியிடுவார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  அறிவித்தார். கடந்த மாதம் 27ம் தேதி திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி, திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா, சுயேட்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், கோ.மதிவானன் ஆகிய 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதிமுக சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுத்தாக்கல் முடிந்த நிலையில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழிய வேண்டும் என்பதால் மற்ற மூன்று பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லாவின் வேட்புமனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்தார். இந்தநிலையில், தலைமை செயலகத்தில் நேற்று திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.  எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK ,MM Abdullah ,State Assembly , State Legislature, MP post, DMK candidate, MM Abdullah, Legislature
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி