மேற்கு வங்க தேர்தல் வன்முறை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் மம்தா உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவ, 10 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரலில் 8 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு, மே 2ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, தேர்தலில் தங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட எதிர்க்கட்சியினர், குறிப்பாக பாஜ. நிர்வாகிகள், அதன் ஆதரவாளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வன்முறை குறித்து விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், கொலைகள் மற்றும் பலாத்காரம் குறித்து சிபிஐ.யும். மற்ற குற்றங்கள் பற்றி சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரிக்கும்படி கடந்த மாதம் உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ 4 குழுக்களை அமைத்து மாநிலம் முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அதேபோல், மற்ற குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சோமன் மித்ரா, சுமன் பால சாகு, ரன்பீர் குமார் ஆகியோரை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில், இந்த குழுவின் விசாரணைக்கு உதவிகள் செய்வதற்காக, மேற்கு வங்கத்தை சேர்ந்த 10 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நியமித்தார். இந்த அதிகாரிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் தனித்தனியாக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவிகள் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை

இந்நிலையில், கொலைகள், பலாத்காரம்  தொடர்பாக ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ, பிர்பும் மாவட்டத்தில் பாஜ நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளது. இது தொடர்பான குற்றப்பத்திரிகையை ராம்புரத் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இது, தேர்தல் வன்முறை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையாகும்,

Related Stories:

More
>