×

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உறியடி உற்சவம்: நம்பெருமாள் புறப்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி உற்சவம் நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ணஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முற்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.

மதியம் 1.30 மணிமுதல் மதியம் 2.30 வரை அலங்காரம் அமுது கண்டருளினார். பின்னர் மாலை 5.30 மணி வரை பொதுஜனசேவை நடைபெறுகிறது. அங்கிருந்து மாலை 6 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான நாளை(1ம் தேதி) காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்வார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேருகிறார்.

பின்னர் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.Tags : Kṛṣṇa ,Temple ,Sriranganatha ,Ranganatha , Uriyadi festival at Srirangam Ranganathar temple on the occasion of Krishna Jayanthi: Namperumal departure
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...