சட்டசபை நிகழ்வில் பங்கேற்க வந்த புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி

புதுச்சேரி: புதுச்சேரி 15வது சட்டசபையின் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26ம்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபை அலுவல்களை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னின்று நடத்தி வந்தார். இதனிடையே இன்று காலை சட்டசபை 4ம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சபாநாயகர் செல்வம், தனது வீட்டில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். சட்டசபை அருகே அவர் வந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி அதிகமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபைக்குள் வராமல் அவரது கார் வெளியேறியது. உடனடியாக சட்டசபை அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சபாநாயகர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சபாநாயகர் செல்வம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டசபையின் இன்றைய அலுவல்களை துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி வழிநடத்தினார். இதனிடையே சபாநாயகரின் உடல்நிலையை பொறுத்து டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>