×

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 329 ஏரி, 56 அணைகட்டு, 16 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறு: விரிவான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல்: நீர்வளத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 329 ஏரிகள், 56 அணைகட்டுகள், 16 செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் கடந்த 2017 முதல் 7 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 4 கட்டங்களாக 2131 கோடியில் 4778 ஏரிகள், 477 அணைக்கட்டுகளை புனரமைத்தல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 743 கோடியில்  1325 ஏரிகள், 107 அணைகட்டுகள்,  45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி 204 பணிகளாக மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டிருந்தது. இதில், தற்போது வரை 204 தொகுப்பில் 183 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 649 கோடியில் 16 உபவடிநிலங்களில் 906 ஏரிகள், 181 அணைக்கட்டுகள், 37 செயற்கை முறையில் செறிவூட்டு கிணறுகள் அமைக்க 45 தொகுப்பு பணிகளாக மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், தற்போது 6 பணிகள் முடிவடைந்துள்ளன. 23 பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 16 பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் 3ம் கட்டமாக 9 உபவடிநிலங்களில் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள், 16 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க 25 தொகுப்பு பணிகளாக மேற்கொள்ளும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து உலக வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகு பணிகளை தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags : World Bank , Tamil Nadu, Irrigation Agriculture, World Bank, Approval
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி