×

ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி: எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார்: ராஜ்நாத் சிங் பேச்சு

சண்டிகர்: ‘ஆப்கானில் தற்போது தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலால் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது’ என்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல் காரணமாக, ஆப்கான்-இந்திய எல்லை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு பிரச்னை குறித்து பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மூன்றாவது பல்ராம்ஜி தாஸ் டாண்டன் நினைவு நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்று பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையால், நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

அங்குள்ள முன்னேற்றங்களை எங்கள் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க எந்த தேச விரோத சக்தியையும் அனுமதிக்கக்கூடாது. எங்களுக்கு இன்னும் சில கவலைகள் உள்ளன. அவை தேசிய பாதுகாப்பின் பார்வையில் சவால்களாக மாறும். எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது. கடல், தரைவழி, வான்வழி பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளோம்,’’ என்றார்.

சீனாவுக்கு எச்சரிக்கை
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருந்தே இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை. இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘சீனா உடனான எல்லைப் பிரச்னையை இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. நாட்டின் எல்லைகள், அதன் மரியாதை மற்றும் சுயமரியாதை ஆகிய பிரச்னைகளில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யாது.  எல்லைகளின் புனிதத்தன்மையை மீறுவதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் எந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தி உள்ளது,’’ என்றார்.

Tags : India ,Rajnath Singh , Afghan, Rajnath Singh, Speech
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...