×

கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்

சென்னை: வட தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை சில இடங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் நேற்று மதியம் தாம்பரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது. நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, அவலாஞ்சியில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. சின்னகல்லார் 80 மிமீ, நடுவட்டம் 70 மிமீ, கேளம்பாக்கம் 60மிமீ, சோழிங்க நல்லூர், காவேரிப்பாக்கம் 50மிமீ, சோழவரம், சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலையம் 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதாலும், வட தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திரப் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவக் காற்று காரணமாகவும் இன்று முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யும்.


Tags : Meteorological Center Info , In coastal districts, for 3 days, rain
× RELATED நாடு முழுவதும் ஒட்டுமொத்த பருவமழை:...