×

நாடு முழுவதும் ஒட்டுமொத்த பருவமழை: இம்மாதம் 44 ஆண்டுகளில் இல்லாத மழை: வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள்படி, இம் மாதத்தில் (ஆகஸ்ட்) இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த ஆகஸ்டில் 1976க்குப் பிறகு முதல் முறையாக 28.4 சதவீதம் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பதிவான உச்சபட்ச மழை கடந்த 1926ம் ஆண்டு பெய்த 33 சதவீத மழையாகும். இந்தாண்டு ஒட்டுமொத்த பருவமழை 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்களில் மழை பற்றாக்குறை நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப். 3ம் தேதி வரை லேசானது முதல் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வானிலை அறிக்கைப்படி வடக்கு சட்டீஸ்கரில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 2 நாள்களில் வடக்கு மத்தியபிரதேசம் மற்றும் தெற்கு உத்தரபிரதேசத்தை நோக்கி நகரும் எனவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அலைகள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், கிழக்கு உத்திரபிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் மண் சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் என்று ஐஎம்டி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகு ஆகஸ்டில் 5 முறை இதுபோன்ற காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : country , Overall monsoon across the country: No rainfall in 44 years this month: Meteorological Center Info
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...