×

ரூ.14 லட்சம் கையாடல் செய்த விவகாரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர் அருகே  வல்லக்கோட்டை சுப்ரமணியசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில்  உள்ளது. இங்கு,முதல் நிலை செயல் அலுவலராக இருந்த சிந்துமதி,  ஒரு தற்காலிக ஊழியரின் பெயரில் காசோலை எடுத்து, கோயில் நிதியில் முறைகேடாக செலவு  செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், ஆணையரின் அனுமதியின்றி, கோயில்  வருமானத்தில் கார் வாங்கியது உள்பட பல புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், மண்டல தணிக்கை அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கடந்த 5 நாட்களாக ஆய்வு  செய்தனர்.

இதில், தற்காலிக ஊழியரின் காசோலை வாயிலாக ரூ.14  லட்சம் வரை கையாடல் செய்தது தெரிந்தது. இந்த செலவை, பல வகை  ரசீதுகளில் பதிவு செய்ததும், கோயில் நிதியில்  தேவையற்ற செலவுகள் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பைப்பட்டது. குழுவினர் அளித்த அறிக்கையின்படி, முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதியை, சஸ்பெண்ட்  செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக  சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நற்சோனையிடம்  கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, முதல் நிலை  செயல் அலுவலர் சிந்துமதி செய்துள்ள வரவு செலவு  விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இதில், கோடிக்கணக்கில் அவர்  முறைகேடாக செலவு செய்து இருப்பதாக அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே, செயல் அலுவலர் சிந்துமதி, மற்றுமொரு குற்றச்சாட்டின் மீது  சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vallakottai Murugan Temple , Manipulation, Affairs, Murugan Temple Executive Officer, Suspended
× RELATED வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்