×

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் பேர் பலி: பாம்பு கடித்து இறப்பவர்களில் உ.பி முதலிடம்: தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

மும்பை: நாட்டிலேயே பாம்பு கடித்து இறப்பவர்களில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக  தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்படும் ஐசிஎம்ஆரின் தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகிலேயே பாம்பு கடியால் இறப்பவர்களில் பாதிபேர் இந்தியர்களாக உள்ளனர். கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 28 லட்சம் பேருக்கு பாம்பு கடித்தது. அவர்களில் 12 லட்சம் பேர் பாம்பு கடியால் இறந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், பாம்பு மீட்பவர்கள்,  பழங்குடியினர், தொலைதூரப் பகுதிகளில் வாழும்  மக்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் பாம்பு கடித்துவிட்டால் உடனே சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல், மூடநம்பிக்கை, விழிப்புணர்வு இல்லாமை, முதலுதவி கிடைக்காத காரணத்தால் பலர் இறந்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, கடந்த ஒரு ஆண்டில் பாம்பு கடித்து இறந்தவர்களில் 94 சதவீதம் பேர் இந்திய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எட்டு மாநிலங்கள் பாம்பு கடியில் முன்னிலையில் உள்ளன. பாம்பு கடியில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 70% பேர் மேற்கண்ட மாநிலங்களில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 8,700 பேர் உயிரிழந்தனர். அதற்கடுத்ததாக ஆந்திராவில் 5,200 பேர், பீகாரில் 4,500 பேர் உயிரிழந்தனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பாம்புகடி சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதார நிபுணர்களின் கூறுகையில், ‘கிராமப்புற அளவில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார மையங்களில் பாம்புகடிக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. உலகில் உள்ள 26,000 பாம்பு இனங்களில், 450 மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றில், 270 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்க முடியும். அதிலும், 25 இனங்கள் கண்டிப்பாக மனித மரணத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் சுமார் 300 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 15 வகைகள் மட்டுமே மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. அனைத்து பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை அல்ல என்பதால் பாம்பு கடி ஏற்பட்டால் பீதியடைய வேண்டியதில்லை. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம்’ என்றனர்.


Tags : India ,National Reproductive Health Research Institute , India, Health Research Institute, Information
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!