×

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவுக்கு சிஇஓவே அங்கீகாரம் வழங்கலாம்: கூடுதல் அதிகாரம் வழங்கி ஆணையர் உத்தரவு

சேலம்: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுயநிதி பள்ளிகளும் முழுமையாக ஆங்கில வழிப்பிரிவுக்கு மாறி வருகிறது. ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அங்கீகாரம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுக்கு அந்தந்த மாவட்ட சிஇஓக்களே அங்கீகாரம் வழங்கும் விதமாக, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுயநிதி, நிதியுதவி, பகுதி நிதியுதவி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள், சம்பந்தப்பட்ட சி.இ.ஓ.,க்களால் பரிந்துரை பெறப்பட்டு, இயக்ககத்தால் உரிய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் சில அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி, நிதியுதவி, பகுதி நிதியுதவி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்க வரும் கருத்துருக்களை, அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்து, அவர்களே அனுமதி வழங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CEO ,Commissioner , CEO may approve English medium courses in high and secondary schools: Commissioner's order granting additional powers
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...