×

இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்

வாஷிங்டன் : இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்த டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கடந்த வாரம் இந்திய பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக தனது பயணத்தை ரத்து செய்த மஸ்க், நடப்பாண்டின் பிற்பகுதியில் இந்தியா வரும் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தேர்தல் நேரத்தில் தனது வருகை அரசியல் ஆக்கப்படலாம் என்பதால் எலான் மஸ்க் தனது பயணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கும் தனது முடிவினை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளார். தனது அமெரிக்க தொழிற்சாலைகளிலேயே மலிவு விலைக்கு மின்சார கார்களை உற்பத்தி செய்து நடப்பாண்டின் இறுதியில் சந்தைக்கு கொண்டு வர மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மலிவு விலை கார்களை தான் டெஸ்லா இந்தியாவிலும் மெக்சிகோவிலும் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. வெளிநாடுகளில் புதிய தொழிற்சாலைகளை தொடங்கும் முடிவினை மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதற்கு விற்பனை குறைவு, அதிகரிக்கும் செலவீனங்கள், டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி ஆகியவையே காரணங்களாக கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்க தொழிற்சாலைகளில் இருந்து 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tesla ,India ,Elan Musk ,America ,Washington ,CEO ,Elon Musk ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைப்பு..!!