×

முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கன்னத்தில் அறைந்திருப்பேன் என சர்ச்சை பேச்சு : கைதான ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு நள்ளிரவில் ஜாமீன்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு நள்ளிரவில் ஜாமீன் கிடைத்துள்ளது.  மகாராஷ்டிராவில் இருந்து சமீபத்தில் ஒன்றிய அமைச்சராக, பாஜ.வை சேர்ந்த நாராயண் ரானே நியமிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம்  மகாராஷ்டிராவின் ராய்கட்டில் நடந்த, ‘மக்கள் ஆசி யாத்திரை’யின் போது `சுதந்திர  தினத்தன்று உரை நிகழத்திய மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே, ‘இது எத்தனையாவது  சுதந்திர தினம்?’ என்று அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, ‘75வது ஆண்டு சுதந்திர தினம்’ என்று கூறியுள்ளார்.

ஒரு முதல்வருக்கு  எத்தனையாவது சுதந்திர தினம் என்பது தெரியாதது வெட்கக்கேடானது. அந்த  இடத்தில் நான் இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேயின் கன்னத்தில  அறைந்திருப்பேன்,’ என்று தெரிவித்தார். ரானேயின்  பேச்சை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போலீசில் சிவசேனா நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதனை  தொடர்ந்து போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நாராயண் ரானே மீது  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், தன்னை கைது செய்யக் கூடாது  என உத்தரவிட கோரியும் மும்பை .உயர் நீதிமன்றத்தில் ரானே மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 இந்நிலையில், நாசிக் போலீசார் நேற்று காலை ரத்னகிரி சென்று,  சிப்லும் பகுதியில் மக்கள் ஆசி  யாத்திரையில் பங்கேற்றிருந்த ரானேவை கைது செய்தனர். பின்னர், அவர்  ரத்னகிரியில் உள்ள சங்கமேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு  செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் நீதிமன்றத்தில் ரானே ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 7 நாள் காவலில் விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருப்பதால் அவரிடம் விரிவான விசாரணை தேவைப்படுவதாக போலீஸ் தரப்பு வழக்கறிஞர் பூஷன் சால்வி வாதிட்டார்.ரானே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜேந்திர ஷிரோக்கர், இது முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்பதால் போலீஸ் காவல் தேவை இல்லை என்று வாதிட்டார். ரானே கைது செய்யப்பட்டதே சட்ட விரோதம் என்ற வாதத்தை முன்வைத்த அவர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் எதுவும் பெறாமலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாராயண ரானேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Tags : Chief Minister ,Uttam Thackeray ,Minister ,Narayan Rane , நாராயண் ரானே
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...