×

போலி அரசு ஆவணங்கள் ஜெராக்ஸ் கடையில் தயாரிப்பு: பெண் உள்பட 4 பேர் கைது

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் பகுதியில் சிலர், அரசின் போலி ஆவணங்கள் தயார் செய்து வினியோகம் செய்வதாக தொடர்ந்து எஸ்பி விஜயகுமாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து,கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்ஐ சதாசிவம், ஜனகராஜ், சுரேஷ், ஏட்டு சதீஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து, போலி ஆவணம் தயாரிப்பவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில், ஊரப்பாக்கம் எம்ஜி நகர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில், போலி ஆவணம் தயாரிப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு அதிரடியாக சென்ற போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு அரசு முத்திரைகளை போலியாக தயாரித்து, அரசு ஆவணங்கள் தயாரிப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு வேலை செய்த நந்தினி, அவரது கணவர் பாலாஜியை கைது செய்தனர். இதைதொடர்ந்து, அவர்களது வீட்டை சோதனை நடத்தியபோது, பத்திரப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் போலி பத்திர நகல், போலி அரசு முத்திரைகள், போலி அரசு ஆவணங்கள் மற்றும் நிலம் சம்பந்தமான போலி ஆவணங்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி, பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தண்டாயுதபாணி, தனசேகர் ஆகியோரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம், இதுவரை யார் யாருக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது. இவர்களின் பின்னணியில் அரசு ஊழியர்கள் செயல்படுகிறார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர். போலி ஆவணம் தயாரித்த வழக்கில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Xerox , Fake government documents, Xerox shop, arrest
× RELATED அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள...