×

ஆப்கான், தஜிகிஸ்தானில் தவித்த 107 இந்தியர் உட்பட 168 பேர் டெல்லி வருகை: இதுவரை 500க்கும் மேற்பட்டோர் மீட்பு

புதுடெல்லி: ஆப்கான் மற்றும் தஜிகிஸ்தானில் சிக்கித் தவித்த 168 இந்தியர்களை இந்திய வெளியுறவு துறை டெல்லிக்கு அழைத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்களது நாட்டு மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில், கடந்த 15ம் தேதி முதல் தற்போது வரை ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை விமானம் மூலம் மீட்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு 87 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

அதன் ஒருபகுதியாக ஆப்கான், தஜிகிஸ்தானில் இருந்து 87 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள். தஜிகிஸ்தானின் துஷான்பேயில் உள்ள இந்திய தூதரகம், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன’ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்று 107 இந்தியர் உட்பட 168 பேர் காபூலில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டனர். முன்னதாக, நேற்று வெளியான செய்தியில் 150 இந்தியர்களை தலிபான்கள் சிறைப்பிடித்ததாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இந்தியர்கள் கடத்தப்படவோ, சிறைப்பிடிக்கப்படவோ இல்லை என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Delhi ,Indians ,Tajikistan , 107 Indians in Afghanistan, Tajikistan, Delhi
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...