ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் முடிந்தது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்கள் மூலமாகவோ, பணியாளர்கள், பக்தர்கள் மூலமாக ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக செய்யும்  பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. அவ்வாறு கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்திர உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.

முதல் நாளில் சுவாமிக்கு பவித்திர மாலைகள்  யாக சாலையில் வைத்து பிரதிஷ்டையும்,  இரண்டாவது நாள் பவித்திர மாலைகள் சமர்ப்பணமும் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று பவித்ர உற்சவம்  பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.  இதையொட்டி  காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு  பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை  கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தங்க, வைர, வைடுரிய நகைகலால், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் கோயில் ஜீயர்கள், கூடுதல் செயல் அலுவலர் தர்மா   உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், பவித்ர உற்சவத்தையொட்டி நேற்று நடைபெற இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.

Related Stories:

More
>