தொட்டாலே உதிரும் சிமெண்ட்!: தரமில்லாத வீடு கட்டியுள்ள அதிமுக ஆட்சி மீது ஊழல் விசாரணை நடத்துங்கள்!: மார்க். கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு..!!

சென்னை: புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற குடியிருப்புகள் குறித்து விசாரணை நடத்தி அப்போதைய அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை புளியந்தோப்பு அடுத்த கே.பி. பார்க் பகுதியில் 3 வருடங்களுக்கு முன் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் 1,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட இந்த குடியிருப்பின் சுவர்கள், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சுவர்களை தொட்டாலே பெயர்ந்து கொட்டுவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. மூன்றாவது நாளாக இன்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடி பொறியாளர்கள், அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் நிபுணர்கள் குழு கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கட்டிடங்கள் குடியிருப்பு வாசிகள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல், தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தொட்டாலே சிமெண்ட் உதிரும் அளவுக்கு மிக மோசமான அளவுக்கு கட்டிடங்கள் இருப்பதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் நிதி ஒதுக்கியும் தரமற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் பெருமளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். கட்டிடங்கள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அதிமுக ஆட்சியில் இத்துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

More