×

அப்பாவி தொழிலாளர்களின் கணக்கில் இருந்து ரூ.21.5 கோடி பிஎப் பணத்தை சுருட்டிய ஊழியர்: மும்பை பிஎப் அலுவலகத்தில் பகீர்; சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க முடிவு

மும்பை: அப்பாவி தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் இருந்து காந்திவலி பிஎப் அலுவலக ஊழியர் ரூ.21.5 கோடி பணத்தை மோசடி செய்து சுருட்டிய அதிர்ச்சி தகவல் அம்பலம் ஆகியுள்ளது. இதுதொடர்பான ஆய்வுகள் முடிந்ததும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, பிஎப் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக பிஎப் பணத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பலர் வேலை இழந்ததாலும், சம்பளம் வழங்கப்படாததாலும் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, மும்பை காந்திவலியில் உள்ள பிஎப் அலுவலக ஊழியர், தனது சக ஊழியர்களின் உடந்தையுடன் சுமார் ரூ.21.5 கோடி பணத்தை சுருட்டியுள்ளார்.

விசாரணையில், காந்திவலி பிஎப் அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிபவர் சந்தன் குமார் சின்ஹா (37). இவர் புலம் பெயர் தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் இருந்த சேமிப்பு தொகையில் இருந்து பணத்தை கோரி, தொழிலாளர்கள் சார்பாக இவரே விண்ணப்பித்துள்ளார். இவ்வாறு சுமார் 817 தொழிலாளர்களின் வங்கிக்கணக்கை பயன்படுத்தியுள்ளார். இந்த கணக்குகளில் பெரும்பாலானவை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரியது. தொழிலாளர்கள் சார்பில் கோரப்பட்ட தொகை பிஎப் நிதியில் இருந்து அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றி மோசடியாக பணத்தை சுருட்டியுள்ளார். இவ்வாறு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட தொகையில் சுமார் 90 சதவீத பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தன் குமார் சின்ஹாவுக்கு உடந்தையாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சந்தன் குமார் உட்பட 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சின்ஹா தலைமறைவாக உள்ளார். பிஎப் அலுவலகத்தில் மோசடி விவரங்களை கண்டறிய தணிக்கை நடைபெற்று வருகிறது. இது முடிந்த பிறகு இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும், என்றார். இந்த மிகப்பெரிய மோசடியில் மூளையாக செயல்பட்ட சந்தன் குமார் சின்ஹா, பீகாரில் உள்ள மகாத் பல்கலைக்கழகத்தில் தத்துவப்படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பொறாமையால் போட்டுக் கொடுத்த உறவினர்கள்
மோசடியில் மூளையாக செயல்பட்டுள்ள சந்தன் குமார் சின்ஹா, தான் இவ்வாறு சுருட்டிய பல கோடி ரூபாயில் ஆடம்பர சொகுசு கார்கள் வாங்கியுள்ளார். இதுதவிர, பல்வேறு ஸ்போர்ட் பைக்குகளும் வைத்துள்ளார். ஹார்லிடேவிட்சன் பைக் வாங்கி பந்தாவாக வலம் வந்துள்ளார். இவரது பந்தா வாழ்க்கையை பார்த்து பொறுக்க முடியாத உறவினர்களில் ஒருவர் கொடுத்த புகாரின் மூலமாகத்தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பிஎப் அதிகாரி ஒருவர் கூறினார்.

* ரூ.5,000 கமிஷன்
தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அதை வேறு கணக்கிற்கு மாற்றுவதற்கு, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கும், அதற்கான பாஸ்வேர்டு விவரங்களும் தேவை. இதற்காக தொழிலாளர்களிடம் ரூ.5,000 கமிஷன் கொடுத்து இந்த விவரங்களை பெற்றதாக கூறப்படுகிறது.

உறுப்பினர்கள் பணத்துக்கு ஆபத்தா?
மும்பையில் உள்ள பிஎப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த மோசடியால் பிஎப் உறுப்பினர்களின் கணக்கில் உள்ள பணத்துக்கு பாதகம் எதுவும் இல்லை. பெரும்பாலான பணம், பிஎப் தொகுப்பு நிதியில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி பெரும்பாலும் பங்குச்சந்தை போன்று சந்தைகளில் முதலீடு செய்ய வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மோசடி, வங்கிக் கொள்ளைக்கு ஒப்பானது என்றே கூறலாம்’’ என்றார்.

* மோசடி நடந்தது எப்படி?
கொரோனா ஊரடங்கின்போது, அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கான விதிகள் தளர்த்தப்பட்டன. அதிகாரிகள் பலர் வீட்டில் இருந்தே பணி மேற்கொண்ட நிலையில், பிற ஊழியர்களிடம் கூடுதல் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிஎப் பணத்தில் உறுப்பினர்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக அதிகாரிகள் தங்கள் கீழ்நிலை ஊழியர்களிடம் பாஸ்வேர்டு கொடுத்துள்ளனர். உதாரணமாக, ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பிஎப் கோரிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.5 லட்சத்துக்கு மேல், சீனியர் அதிகாரிகளின் மறு ஒப்புதலுக்கு செல்லும் எனவேதான், இதற்கு கீழ் உள்ள தொகையை கோரி ஒப்புதல் அளித்துள்ளனர் என பிஎப் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

* பழைய கணக்கை புதுப்பித்து மோசடி
மும்பையை சேர்ந்த ஜூவல்லரி, தொழிற்சாலை உட்பட சில நிறுவனங்கள் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுள்ளன. இவற்றில் பணி புரிந்தவர்களின் விவரங்களை திரட்டியுள்ளனர். குறிப்பாக 2014ம் ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்ட பிஎப் கணக்காக இருந்தால், அவற்றில் இருந்து பணம் எடுக்க முதலில் யுஏஎன் என்ற பொது கணக்கு எண்ணை உருவாக்க வேண்டும். இவ்வாறு பழைய கணக்குகளுக்கு யுஏஎன் உருவாக்கி மோசடி செய்துள்ளனர். தணிக்கையில் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு நுணுக்கமாக இந்த பலே மோசடி அரங்கேறியுள்ளதாக பிஎப் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags : BP ,Pakir ,Mumbai ,CBI , Employee who rolled over Rs 21.5 crore BP money from the account of innocent workers: Pakir in Mumbai BP office; Decided to hand over the case to the CBI
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...