×

அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 65 பேர் உடல் கருகி உயிரிழப்பு : நேச நாடுகளின் உதவியை கோரினார் பிரதமர் அய்மான்!!

அல்ஜீரியா : வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை  65 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிற நாடுகள் உதவ வேண்டும் என அல்ஜீரிய பிரதமர் அய்மான் கோரிக்கை விடுத்து இருந்தார் . அல்ஜீரியாவின் வடக்கு வனப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 12க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றியது. வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று எதிரொலியாக காட்டுத்தீ மளமளவென பரவி வந்தது.

தீவிரமாக பரவி வந்த தீ கபிலை என்ற மாநிலத்தில் உள்ள டிஸி ஓசோ என்ற சிறிய நகரத்திற்கு பரவியது. அதிக வேகத்தில் பரவிய தீயை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் குடும்பங்களுடன் வெளியேறினர். டிஸி ஓசோ நகரில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் அனைத்தையும் சில நிமிடங்களில் காட்டுத்தீ அழித்துவிட்டது.அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் அல்ஜீரியா ராணுவமும் கைகோர்த்துள்ளன. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுப்புற பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், கபிலை மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 65 பேர் உயிரிழந்துகிட்டதாக அல்ஜீரியா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 25 ராணுவ வீரர்களும் அடக்கம் என்று அல்ஜீரியா பிரதமர் அய்மான் தெரிவித்துள்ளார். காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர நேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பிரதமர் அய்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Algeria ,Ayman , அல்ஜீரியா
× RELATED நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மொராக்கோவில் 300 பேர் பரிதாப பலி