×

மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

டாக்கா: மேற்குவங்கத்துக்கு வந்து மாயமான வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசிம் அனார்(56). இவர் வங்கதேசத்தின் ஜெனைடா-4 தொகுதியில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்வருல் அசிம் அனார் கடந்த 12ம் தேதி தனிப்பட்ட பயணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அங்கு பாரா நகர் பகுதியில் தன் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வௌியே சென்ற அன்வருல் அசிம், வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அன்வருலின் நண்பர்கள் பாராநகர் காவல்துறையில் புகாரளித்தனர். காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக அன்வருலை தேடி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வௌியாகி உள்ளது.

இதுகுறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் மாயமான அன்வருல் அசிம் அனார் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அன்வருல்லின் சடலம் மீட்கப்பட்டு வங்கதேசம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்வருல் கொலை வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறை முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது” என்று கூறினார். இதனிடையே அன்வருல்லின் மரணத்துக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

The post மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Anwarul ,Kolkata ,Bangladesh ,Dhaka ,West Bengal ,Anwarul Azim Anar ,Awami League party ,Zenaida ,-4 Constituency ,Dinakaran ,
× RELATED கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’...